Tuesday 5 November 2013

கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்!



பொதுவாக ஹோமியோபதி மருத்துவமுறையில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்தமுறை மருந்துகளால் தீங்கு ஏற்படுவதில்லை. இந்த மருந்துகள் பக்க விளைவுகளையோ அல்லது பின் விளைவுகளையோ ஏற்படுத்துவதில்லை என்பதும் ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை என்பதும் இந்த மருத்துவ முறையின் கூடுதல் தனிச்சிறப்பு எனலாம்.
 
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஹோமியோபதி மருந்துகள் முழுப் பாதுகாப்பானவை. மருந்துகளை உட்கொள்ளும் முறை மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இனிமையான சுவையுடன் இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

எல்லாவகையான நோய்களுக்கும் நிரந்தர குணம் அளிக்கும் வகையில் ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அந்த வகையில் கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் பற்றிப் பார்ப்போம்.

இன்றைய நவீனயுகத்தில் படித்த பெண்களும், அனுபவம் மிக்க நடுத்தர வயதுப் பெண்களும் மாதவிலக்குக் கோளாறுகள் (Menstrual Disorders), கர்ப்பப்பை கோளாறுகள் (Uterine Problems), பாலியல் பிரச்னைகளுக்கு (Sexual Disorders) முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அந்தரங்கமாகக் கருதி சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். வெளியே சொல்வதற்கு சங்கடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

Menorrhagia எனப்படும் அதிகளவு மாதப்போக்கு, Metrorhagia எனப்படும் இடைக்கால மாதப்போக்கு, Dysmenorrhea எனப்படும் வலிமிக்க மாதப்போக்கு, Amenorrhea எனப்படும் தடைப்படும் மாதப்போக்கு, Leucorrhea எனப்படும் வெள்ளைப்பாடு, Oophoritis, Salpingitis, Metritis போன்ற கர்ப்பப்பை சார்ந்த அழற்சிகள், Cysts எனப்படும் நீர்க்கட்டிகள் Uterine Fibroids எனப்படும் கர்ப்பப்பை நார்க்கட்டிகள், Cervical Polyp, Uterine, Tumours, Myoma எனப்படும் சிறிய, பெரிய தசைக்கட்டிகள், வீக்கம் போன்றவை பரவலாகப் பெண்களிடம் காணப்படும் வியாதிகளில் ஒன்றாக உள்ளது. இதுவே கர்ப்பப்பை கட்டிகள் எனப்படுகின்றன.

பேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ள கர்ப்பப்பை கூபக எலும்பானது (Pelvis) அதன் நடுவில் பாதுகாப்பாக உள்ளது. பெண்களைத் தாய்மையடையச் செய்யவும், இனப்பெருக்கத்திற்கும் கர்ப்பப்பை அவசியமானதாகும். கர்ப்பப்பையின் ஆரோக்கியமே ஒரு பெண்ணின் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

எனவே கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண நிலையில் நோய் இருக்கும்போது அலட்சியப்படுத்தி விட்டால் அந்நோய் முற்றிய நிலையில் வேதனை அதிகரித்து உடல் பலவீனப்பட நேரிடலாம். நோய் முற்றிப்போனால் எந்த மருத்துவ முறையானாலும் குணப்படுத்துவது சிரமம்.


காரணங்கள்

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழ்நிலைகளாலும், பதற்றம், பரபரப்பு, அவசரங்களாலும், உரங்கள், பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றாலும், உணவுப் பழக்க வழக்கங்களாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாகக் கூட இருக்கலாம்.

அதிலும் கடந்த தலைமுறையினரைக் காட்டிலும் இந்த தலைமுறையினரில் குறைவான வயதுடைய பெண்களுக்கு இதுபோன்ற கட்டிகள் அதிகளவில் காணப்படுகின்றன.

கர்ப்பப்பை கட்டிகளைப் பொருத்தவரை அலோபதி மருத்துவமுறையில் மருந்து, மாத்திரைகள் மூலம் குணமாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பப்பை அறுவைசிகிச்சை (Hysterectomy) மூலம் அகற்றப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க் கட்டிகள் தவிர மற்ற அனைத்து வகைக் கட்டிகளையும் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். ஹோமியோபதி மருந்துகள் இதுபோன்ற கட்டிகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதுடன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்தும், கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியும் கர்ப்பப்பை இயக்கத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வருகின்றன.

சினைப்பைகளிலோ (Ovaries), கருக்குழாய்களிலோ (Fallopian Tubes) கர்ப்பப்பையிலோ (Uterus) வீக்கம் (Enlargement) அல்லது கட்டிகள் இருந்தால் அதனால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். மாதவிலக்கு தடைபடுதல் (Suppression of Menses), கட்டுக்கடங்காத அதீத இரத்தப்போக்கு (Profuse Bleeding) இடுப்பு வலி, அடிமுதுகுவலி, அடி வயிற்றுவலி, கால்களில் வலி, நடக்க இயலாத பலவீனம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், பிறப்புறுப்பில் உஷ்ணம், வலி, அதிக வெள்ளைப்பாடு, குளிர்ச்சுரம், தலைவலி, இரைப்பைக் கோளாறுகள், உடலிலும் மனதிலும் அமைதியற்ற நிலை (Restlessness) போன்ற பிரச்னைகளால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை துயரமாகி விடும்.

மிகவும் குறைந்த வயதுடைய பெண்களின் சினைப்பையில் நீர்மக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் அலோபதி மருத்துவத்தை விட ஹோமியோபதி மருந்துகளே சிறந்த பலனைத் தரும். சினைப்பையில் நீர்மக் கட்டிகளுக்கு அலோபதி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டும் எவ்விதப் பயனும் இல்லாத நிலையில் ஹோமியோபதி மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை அளித்ததற்கான முன்உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.

சிகிச்சை முறைகள்

ஹோமியோபதி மருத்துவத்தில் விபத்து காலங்கள் தவிர பெரும்பாலான வியாதிகளுக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை.

கர்ப்பப்பை வீக்கத்தை, வலி அல்லது கட்டிகளைக் குணப்படுத்த கோனியம், ஆரம்மெட், கார்போ அனிமாலிஸ், கியோசோட்டம், தைராய்டின், அபிஸ்மெல், லாச்சஸிஸ், கல்கேரியா கார்ப், காலிபுரோம், மூரக்ஸ் போன்ற ஏராளமான மருந்துகள் நோயின் தன்மைக்கேற்ப உள்ளன.

மேலும் லக்கானினம், தூஜா, கல்கேரியா புளோர், சிமிசிபியூகா போன்ற மருந்துகளும் கர்ப்பப்பை கட்டி உள்ளவர்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கையான வழிமுறைகளில் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் எந்த இழப்புமின்றி நோய்களைக் குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவமே மிகவும் சிறந்தது.

1 comment:

  1. இக்கட்டுரை எங்களுடையது.-----10ஆண்டுகளுக்கு முன் எங்களின் நூலில் வெளிவந்தது....

    Drs.S.வெங்கடாசலம்,வி.ஆவுடேஸ்வரி,சாத்தூர்.

    ReplyDelete