Saturday 2 November 2013

ஹோமியோபதியின் பிறப்பு & சிறப்பு

ஹோமியோபதியின் தந்தை டாக்டர் சாமுவேல் ஹானிமன் அவர்களால் 'அலோபதி' என்று பெயரிடப்பட்ட ஆங்கில மருத்துவம்,

 
 இந்தியாவின் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம், சீனாவின் அக்கு-பங்க்சர் மருத்துவம், அரபு நாடுகளின் யுனானி மருத்துவம்.... இன்னும் இவை போன்ற பல்வேறு மருத்துவ முறைகள் உலகில் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் தோன்றிய ஃபிரடெரிக் சாமுவேல் ஹானிமன் எம்.டி., என்னும் அலோபதி மருத்துவரால், அவரின் மனித நேயச் சிந்தனையின் விளைவால் தோன்றியதே ஹோமியோபதி மருத்துவ முறை.

ஆம், ஏராளமான வாடிக்கையாளர்களைக் கொண்ட பரபரப்பான அலோபதி மருத்துவராய்த் திகழ்ந்த டாக்டர் ஹானிமன் ஒரு கட்டத்தில் தாம் பின் பற்றுகிற மருத்துவ முறை குறித்தும், நோயாளிகள் குறித்தும் சோர்வடைந்தார்; கவலை மிகக் கொண்டார்.

தாம் சிகிச்சையளிக்கும் நோயாளிகள் திரும்பத் திரும்ப நோய்வாய்ப்படுவது அவரை வருத்தத்திற்குள்ளாக்கியது. மனித நேயரான அவரால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தாம் செய்து வருவது மக்களுக்கு நல்ல காரியமல்ல என்பதை உணர்ந்தார்.

தம்மிடம் (அதாவது அலோபதி மருத்துவத்தில்) சிகிச்சை பெறும் நோயாளி சிறிது காலம் கழித்து அதே நோயால் இன்னும் கடுமையாகப் பாதிக்கப்படுவதோ அல்லது முன்பிருந்த நோயைவிடக் கடுமையான வேறொரு நோயால் பீடிக்கப்படுவதோ ஏன்? என்ற சிந்தனை குற்ற உணர்வாய் அவரைக் குடைந்தது. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதை நிறுத்தினார்.

'ஏன்?' என்ற கேள்வியுடன் 'எது சரியான மருத்துவம்?' என்ற தேடுதலில் தீவிரமாய் இறங்கினார்.

விடை கிடைத்தது அந்த மருத்துவ மாமேதைக்கு!

உலகுக்குக் கிடைத்தது ஹோமியோபதி என்னும் சரியான... உண்மையான ஒரு மருத்துவ முறை.

இதுவரை தாம் பின்பற்றி வந்த அலோபதி மருத்துவம் நோயாளிகளை நலமாக்கவில்லை; மாறாக, நோய்களை- நோய்க்குறிகளை மறையச்செய்திருக்கிறது அல்லது உள்ளமுக்கியிருக்கிறது; அதையே 'நோய் குணமாகிவிட்டது' என்று இத்தனை காலமும் உலகம் நம்பியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் விளைவாக ஹோமியோபதி என்னும் உண்மையான மருத்துவ முறையைக் கண்டறிந்தார்.

"ஒத்தது ஒத்ததை நலமாக்கும்" (similia similibus curenter) என்பதே அவர் கண்டறிந்த அந்த மாபெரும் உண்மையாகும்.

ஆம்!முள்ளை முள்ளால் எடுப்பது;வைரத்தை வைரத்தால் அறுப்பது என்பனவற்றிற்கேற்ப, எதனால் நோய் தோன்றுகிறதோ அதனாலேயே நோயைக் குணப்படுத்த வேண்டும்-முடியும் என்னும் மாபெரும் உண்மையை உலகுக்களித்தார். இந்தக் கண்டுபிடிப்பிற்கு அவர் தம்மையே பரிசோதனைக் களமாக்கிக் கொண்டார்.

அக் கால கட்டத்தில் பரவலாயி்ருந்த மலேரியாக் காய்ச்சலுக்கு அலோபதி மருத்துவத்தில், 'கொய்னா' (சிங்கோனா) என்னும் மருந்தே வழங்கப்பட்டது. சிங்கோனா மரத்தின் பட்டையைச் சாறு பிழிந்து அருந்தினார்; மலேரியாக் காய்ச்சலின் தாக்குதலுக்கு ஆளானார். ஏற்பட்ட உடல் மனக் குறிகளைக் கவனமாய்க் குறிப்பெடுத்துக்கொண்டார்; அதே மரத்தின் பட்டையின் சாற்றை வீரியப்படுத்தி உட்கொண்டார். தணிந்தது மலேரியாக் காய்ச்சல்; தோன்றிய நோய்க்குறிகள் அனைத்தும் மறைந்தன. இதை மேலும் பலருக்குக் கொடுத்துச் சோதனை செய்து, கண்ட உண்மையை உறுதிப்படுத்திக்கொண்டார்.

'ஹோமியோபதி' என்னும் அருமையான மருத்துவ முறை உலகுக்குக் கிடைத்தது.

ஹோமியோபதியின் சிறப்பு

அலோபதி உள்ளிட்ட பிற மருத்துவ முறைகளிலிருந்து, ஹோமியோபதி மருத்துவம் அடிப்படையிலேயே நேரெதிரானது அல்லது முற்றிலும் மாறுபட்டது.

ஒத்தது ஒத்ததை நலமாக்கும் (similia similibus curenter) என்பது இம் மருத்துவ முறையின் தனிச் சிறப்பு.




குளிர்ச்சிக்குச் சூடு; சூட்டுக்குக் குளிர்ச்சி என்பது போன்ற எதிர் நிலைத் தத்துவத்தைக்கொண்டது (contra contrary curenter) அலோபதி போன்ற மருத்துவ முறைகள்.

நோய்கள் உள்ளமுக்கப்படுவதற்கோ அல்லது வேறு நோயாக உருமாறி வருவதற்கோ இத்தகைய தத்துவமே காரணமாகும். அதாவது, சூடு பட்ட இடத்தில் குளிர்ச்சியாக ஒத்தடமிடுவதால் உடனே எரிச்சலும் வலியும் தணியும். ஆனால், இது மேலோட்டமான- தற்காலிகமான நிவாரணமே; பின்னர் அந்த இடம் கொப்புளமாகிவிடும்; சீழ்ப்பிடிக்கும்; புண்ணாகிப் போகும். ஆனால், சூடுபட்ட அந்த இடத்தை அதே அணலால் சூடு பொறுக்குமளவில் மேலும் சிறிது நேரம் வெப்பமூட்டுங்கள்; சற்று நேரம் கழித்து எரிச்சலும் வலியும் தணிந்துவிடும் ஒருபோதும் அந்த இடம் கொப்புளமாவதில்லை; கொப்புளமாவதில்லையென்பதால் அங்கே சீழ்ப் பிடிப்பதில்லை; சீழ்ப் பிடிப்பதில்லையென்பதால் சூடு பட்ட அந்த இடம் புண்ணாவதுமில்லை!

இதுதான்... இதேதான் ஹோமியோபதியின் தத்துவம்.
எந்த முறை சரியானது? சிறப்பானது? நலமாக்க வேண்டியது நோயையா? நோய்வாய்ப்பட்ட மனிதனையா? நோயை அல்ல; நோய்வாய்ப்பட்ட மனிதனையே நலமாக்க வேண்டும்!

ஆம்! ஹோமியோபதி, நோய் என்ன என்பதைக் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை; மாறாக நோய்வாய்ப்பட்ட மனிதனையே ஆராய்கிறது.

அவனிடம் தோன்றியுள்ள உடல்-மனக் குறிகளே (உணர்வுகள் - sensations, விருப்பு வெறுப்புகள் - desires and aversions, தனது நிலையை வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் - gestures போன்றவற்றுடன் மிகச் சிறப்பாக... அந்நோயாளியின் மன நிலையும்- இயல்புகளும்) அவனுக்குரிய மருந்து எது? என்பதைத் தீர்மானிக்கின்றன.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மருந்துப் பொருளானது அப்படியே அவனுக்குக் கொடுக்கப்படுகிறதா? இல்லை! தெரிவு செய்யப்பட்ட அந்த மருந்துப் பொருள் அரைத்தல், குலுக்குதல் போன்ற முறைகளால் வீரியப்படுத்தப்படுகிறது.

இவ்வீரியப்படுத்தலால், அம் மருந்தில் அதன் மூலக் கூறுகள் இருப்பதில்லை; மாறாக, அம் மருந்தின் ஆற்றல் மட்டுமே இருக்கிறது. அதனால்தான், பக்கவிளைவுகளுக்கு வழியில்லாமல் போகிறது. அந்த ஆற்றலானது அந்த நோயாளி மனிதனுக்குத் தேவையான ஆற்றலாக மாறுவதன் வாயிலாக சிறந்த நோயெதிர்ப்பாற்றலைப் பெற்ற மனிதனாகிவிடுகிறான். அவனிடம் ஏற்பட்டிருந்த நோயும், நோய்க்குறிகளும் அகன்று விடுகின்றன உள் அமுக்கங்களோ பக்க விளைவுகளோ ஏதுமின்றி! ஆக, உலகிலுள்ள எண்ணற்ற மருந்துப் பொருள்களில் அந்த மனிதனுக்குரிய மருந்துப் பொருள் என்பது ஏதோ ஒன்றுதான். அந்த ஏதோ ஒன்றைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் ஹோமியோபதியருடைய பணி.

அந்த ஒற்றை மருந்து அவனிடம் தோன்றியுள்ள நோயையும்நோய்க்குறிகளையும் நீக்கி விடும். பல்வேறு மருந்துப் பொருள்களையும் (ஹோமியோ மருந்துகளையும் கூட) கலந்தடித்துக் கொடுக்க வேண்டியதில்லை; அவ்வாறு கொடுப்பதும் கூடாது; அவ்வாறு கொடுத்தால் அது ஹோமியோபதி மருத்துவமும் இல்லை.

No comments:

Post a Comment