Saturday, 2 November 2013

கொலஸ்ட்ரால் நண்பனா? பகைவனா?



‘நீரின்றி அமையாது உலகு’ என்பதைப் போல கொழுப்பு சத்து இன்றி எந்த உடலும் இருக்க வாய்ப்பில்லை எனலாம். ஏனெனில் உடல் இயக்கத்திற்கான அடிப்படை தேவையாக கொழுப்பு மற்றும் அதன் வகையைச் சேர்ந்த கொலஸ்ட்ரால் விளங்குகிறது. மனித உடலுக்கு கொழுப்பு பல்வேறு நன்மைகளைச் செய்து நண்பனைப் போல் இருந்து கொண்டு சில நேரங்களில் மிக மோசமான எதிரியைப் போல செயல்பட்டு நமது அஜாக்கிரதையால் உயிருக்கு வேட்டு வைக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடித்து விடுகிறது.

நன்மைகள் :

உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை மூடிப் பாதுகாக்கும் சவ்வு உருவாகிடவும் கோடை காலங்களில் உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறி உடலின் வெப்பம் குறைந்து விடாமல் உடல் வெப்பத்தை சீராக பராமரித்து தோல், முடியை ஆரோக்கிய மாக வைத்திருக்கவும், வெளிப்புற அதிர்வுகளிலிருந்து உடல் உள் உறுப்புக்களை பாதுகாத்து, உடல் செல்கள் நல்லமுறையில் இயங்கிடவும் ஃபிரி ரேடிகல் டேமேஜ் (Free Radical Damage) எனும் செல்களின் சேதாரத்தை தடுத்து மோசமான புற்றுநோய் போன்ற கொடிய நோய் ஏற்படாமல் கவனித்து கொள்கிறது.

நாள்தோறும் ஐம்புலன்கள் மூலமாக கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் உச்சிமுதல் பாதம் வரை அமையப் பெற்ற கொலஸ்ட்ரால் உதவியோடு நரம்புகளில் உணர்வுகளை கடத்துவது, ஞாபகங்களை சேமிப்பது, தேகம் மென்மையாக அமைவதற்கான திசுக்களை கட்டமைப்பதிலும் ஆண் பெண் புற பாலுறுப்புகளின் வளர்ச்சியை நெறிப்படுத்துவதற்கான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டிரோஜன் புரோகெஸ்டிரான் ஆகிய ஹார்மோன் உற்பத்தி ஆவதற்கும் சில குறிப்பிட்ட நோய்களிலிருந்து உடல் உறுப்புகள் பாதிக்காத வகையில் தடுத்தும் அன்னிய பொருள் ஏதேனும் இரத்த ஒட்டத்தில் கலந்துவிட்டால் அப்பொருள் ஏதாவது ஒரு வழியில் உடலை விட்டு வெளியேறும் வரை கொழுப்பு திசு அப்பொருளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து உடலின் கடமை தவறாத காவலாளியாக தனது பணியை பொறுப்புடன் மேற் கொள்கிறது.

உடலின் தேவைக்கு போக மீதமுள்ள கொழுப்பு கல்லீரலிலும் உடலின் தோலுக்கு அடியில் உள்ள திசுக்களில் சேமிக்கப்பட்டு பட்டினியின் போது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

இப்படி உடலின் இயக்கத்திற்கு ஆதார சக்திகளின் ஒன்றாக திகழும் கொலஸ்ட்ரால் மனித உடலுக்கு எதிரான வேலையில் ஈடுபடுவது எப்படி?

பார்ப்பதற்கு வெண்மை நிறம் கொண்ட மெழுகு போன்ற தோற்றமுள்ள கொழுப்பு வகையை சேர்ந்த ஒரு பொருள் தான் கொலஸ்ட்ரால். நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்கு வந்து சேர்கிற கொலஸ்ட்ரால் இரத்தத்தில் நேரடியாக கலந்து கரையாது என்பதற்காக உடலுக்குள் வந்து சேர்கிற கொலஸ்ட்ராலுக்கு தகுந்தாற் போல கல்லீரலும் லிபோ புரோட்டின் (Lipo protine) எனும் கொழுப்பு புரதத்தை உற்பத்தி செய்து உடலுக்குள் வந்து சேரும் கொலஸ்ட்ரால் மீது போர்வை போல் படிந்து உடலின் பல பாகங்களுக்கு நகர்த்தி செல்கிறது.

உணவின் மூலம் உடலுக்கு வந்து சேர்கிற மிகக் குறைந்த அடர்த்தி உள்ள கொழுப்பு புரதத்துடன் கல்லீரலிலிருந்து உற்பத்தியான லிபோ புரோட்டின் சேர்ந்தால் மிக குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு (Very Low Density Protine V.L.D.L) ஆகும்.

அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதத்துடன் – லிபோ புரோட்டின் சேரும் போது அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு ( High Density Lipo Protine H.D.L ) எனப்படும். V. L. D. L இரத்தத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு பயன்பட்ட பின் குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது.

(Low Density Lipo Protine L.D.L ) இந்த LDL கொலஸ்ட்ரால் தான் மனிதஉடலுக்கு வில்லனாக திகழ்கிறது. விருந்து, பண்டிகை போன்ற நாட்களில் எண்ணெய், நெய்யில் பொரித்த, வறுத்த உணவுகளை அதிகளவு உண்பதால் உடலுக்குள் அதிகளவில் வரும் கொலஸ்டிரால் கல்லீரல் மூலம் உற்பத்தியாகும் லிபோ புரோட்டின் எனும் கொழுப்பு புரதம் இவை இரண்டும் அதிகரிக்கும் போது இயற்கையாகவே L.D.L கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து விடும்.

V.L.D.L ஐவிட H.D.L ல் கொழுப்பு புரதம் சற்று அதிகமாக இருப்பதால் இரத்த பிளாஸ்மாவில் உள்ள புரதத்துடன் சேர்ந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு இரத்த நாளத்தின் உட்புற சுவர்களில் அதிகப்படியான கொலஸ்டிராலை படியச் செய்து விடிகிறது. தொடர்ந்து இம்மாதிரி இரத்த நாளங்களில் படிந்து வருவதின் காரணமாக இரத்த நாளங்களின் உட்புறம் குறுகலாகவும், ரத்தநாளம் தடிமனாகவும் ஆகிவிடுகிறது, இதன் காரணமாக இதயத்திற்கும் மற்ற அனைத்து உடல் உறுப்புகளுக்கும் இயல்பான வேகத்தில் இரத்தம் சென்றடைவதில்லை.

பிராணவாயும் போதுமான அளவு உடலுறுப்புக்களுக்கு கிடைப்பதில் தடையேற்படுகிறது. மூளைக்குச் செல்லும் இரத்த நாளத்தில் தடையேற்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கும் பிற ஏனைய உறுப்புகளின் இரத்த நாளம் பாதிக்கப்படும் போது சம்பந்தப்பட்ட உறுப்புகள் பாதித்து முகப்பரு முதல் ஆண்மைக்குறைபாடு, இரத்தக்கொதிப்பு, மனநிலைபாதிப்பு வரை ஏற்படும்.

LDL கொலஸ்ட்ராலின் சதிச் செயலை முறியடிக்கும் பணியை HDL கொலஸ்ட்ரால் கூடுமானவரை மேற்க்கொண்டு நண்பனாகச் செயல்படுகிறது.

இரத்த நாளங்களில் LDL கொலஸ்ட்ரால் படியவிட்டுச் சென்ற கெட்ட கொலஸ்ட்ராலை சுத்தம் செய்து கல்லீரல் வழியாக வெளியேற்ற உதவுகிறது. இதனால் மாரடைப்பு, இரத்த நாளநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்திட உடலில் LDL கொலஸ்ட்ரால் குறைந்து HDL கொலஸ்ட்ரால் அதிகரிக்க வேண்டும்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணம் :

பரம்பரை, சோம்பேறித்தனம், உடற்பயிற்சியின்மை, புகை, மதுபழக்கம், மனஅழுத்தம், கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் விரும்பி உண்ணுதல், சர்க்கரை நோய், நாளமில்லா சுரப்பிகளின் சமச்சீரற்ற நிலைஆகிய காரணங்களால் கொலஸ்டிரால் அதிகரிக்கிறது.

L.D.L. குறைந்து H.D.L. அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

புகை, மது தவிர்க்க வேண்டும்.

தினம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, எடை குறைக்க முயற்சி, யோகசன பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
நார்சத்துள்ள உணவு, கீரைகள், தினசரி உணவில் தேவை
காளான், ஆப்பிள், இதர பழ வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்

பசலைக்கீரை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
இறைச்சி உணவின் போது நார்சத்துள்ள உணவும் சேர்த்து உண்ண வேண்டும்

கடல் வாழ் உயிரினங்களை உணவில் சேர்ப்பது நல்லது

பால், பாலிலிருந்து உருவான உணவுப் பொருள்கள் தவிர்த்தல் நல்லது.

அதிக மாவுப் பண்டங்கள் கூடாது

வெண்ணெய், தயிர், நெய் தவிர்க்க வேண்டும்

மூளை, ஈரல் போன்ற அசைவ உணவு கூடவே கூடாது

ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 500 மி.லி.எண்ணைக்கு அதிகமாக சமையலில் பயன்படுத்தக் கூடாது.

ஹோமியோபதி சிகிச்சை :

அல்லியம் சட்டிவம் 6 தினம் 3 வேளை (கொலஸ்ட்ரால் குறையும் வரை)
செலிட்டோனியம் 3 தினம் இருவேளை பொருத்தமான மருந்து தேர்வு செய்து தரப்பட வேண்டும்

மற்ற சில ஹோமியோபதி மருந்துகள் :

சல்பர், லைகோபோடியம், நக்ஸ்வாமிகா, பல்சட்டிலா, பைடோலக்கா பெர்ரி, பாஸ்பரஸ், தூஜா, ராவோல்பியா, காலிப்புரோமோடம், அம்மோனியம் மூர், கல்கேரியா கார்ப், கொலஸ்ட்ரினம் போன்றவைகள்.

1 comment:

  1. இக்கட்டுரை ‘மாற்றுமருத்துவம்’ இதழில் டாக்டர்.கே.வெள்ளைச்சாமி[விருதுநகர்] அவர்கள் எழுதி வெளியானது....டாக்டர்.எஸ்.வெங்கடாசலம்-மாற்றுமருத்துவம்-ஆசிரியர்.9443145700சாத்தூர்

    ReplyDelete