ஓமியோபதி மருத்துவத்தின் தத்துவ நூலான ஆர்கனான் அவ்வக்கால கட்டங்களில் மாமேதை ஹானிமன் அவர்களின் பட்டறிவுக் கண்டுபிடிப்புகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு செம்மை படுத்திக்கொண்டே வந்துள்ளது.
ஆர்கனான் முதல்பதிப்பு 1810-ஆம் ஆண்டிலும் தொடர்ந்து 1818, 1824, 1829, 1833-ஆம் ஆண்டுகளில் முறையே இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் பதிப்புகள் வெளியாகின. ஒவ்வொரு பதிப்பும் ஆய்வுகளின் முடிவையும் மருந்தை மெய்ப் பித்தலின் அடிப்படையில் மருத்துவ தத்துவங்களாகச் சேர்க்க வேண்டியதைப் புதிதாகச் சேர்த்தும், மாற்றியமைக்க வேண்டியவைகளை மாற்றியும், நீக்க வேண்டியவற்றை நீக்கியும் , செம்மைப்படுத்தி வெளியிடப்பட்டன.
கால மாற்றத்தால் “பழையன கழிதலும் புதியனப் புகுதலும் காலவழுவல்” என்பதற் கிணங்க இவ்வைந்து பதிப்புகளையும் டாக்டர். ஹானிமன் அவர்கள் தம் வாழ்நாளிலேயே அவ்வப்போது காலம் கடந்தவைகளாக்கப்பட்டன.
இறுதியாக 1838-ஆம் ஆண்டிலிருந்து 1842 வரை ஐந்தாண்டுகள் தனது தள்ளாத முதுமையிலும் கடுமையாக உழைத்து இறுதியாக ஆறாம் பதிப்பு ஆர்கனான் பெரும் மாற்றங்களுடன் நிறைவு செய்து மருந்து வீரியப்படுத்துவதிலும், வழங்குவதிலும், முழுமையுடன் நிறைவான மருத்துவ முறைகளாகக் கண்டறிந்து அச்சேற்றாமலேயே 1843-ஆண்டு இயற்கை எய்திவிட்டார்.
டாக்டர். ஹானிமன் மறைவிற்குப் பின்னரும் 77 ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த ஆறாம் பதிப்பு நூலை அன்னாரின் மனைவி திருமதி. மெலானியின் மறைவிற்குப் பின் கையெழுத்துப் படிகளாகக் கிடந்தவற்றை டாக்டர். ஹேல் என்பவர் ஜெர்மன் மொழியில் அச்சிட்டு 1920-ம் ஆண்டு வெளியிட்டபின்னர், 1921-ல் டாக்டர். வில்லியம் போரிக் ஆங்கில பதிப்பை வெளியிட்டார்.
டாக்டர். ஹானிமன் தனது நான்காவது பதிப்பின் ஆர்கனான் மூலம் தேர்வு செய்யப்பட்ட மருந்தை நோயருக்கு நேரடியாக சர்க்கரை உருண்டைகளாக வழங்குவதைப் பரிந்துரைத்திருந்தார். பின்னர் வந்த ஐந்தாம் பதிப்பில் நாட்பட்ட நோய்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட மருந்தை (சதாம்ச) நூற்றுப் படிமுறை வீரியத்தில் நீரில் கரைத்து வீரியத்தை மாற்றி கொடுப்பதைப் பரிந்துரைத்திருந்தார். நூற்றுப் படிமுறை வீரியத்தில் மருந்தைக் கொடுப்பதிலும் விரைவான தீர்வு கிடைப்பதில் விரும்பத்தகாத துயர் மிகுதல், மருந்து செயலாற்றும் சரியான கால அளவின்மை, அடிக்கடி மருந்தைக் கொடுக்கத் தடையால் துயரருக்குப் பலநாள் தொல்லை நீடிப்பு, மருந்தின் அளவு, வீரியம், வழங்குதல், முதலானவற்றில் குழப்பங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக மருந்து உட்கொண்ட நோயருக்கு அடுத்து என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டிய மனஉளைச்சல்கள் போன்ற தொல்லைகள் இருந்தன. இவைகளை ஆறாவது ஆர்கனான் பதிப்பின் மூலம் திருத்தம் மேற்கொண்டு புதிய வீரியப்படுத்தும் முறை, முழுநிறைவு பெற்ற மருத்துவமுறை, “புதிய மாற்றம் செய்யப்பட்ட 50 மில்லிசிமல் வீரியம்” கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை எல்.எம்.வீரியம் என்றும் மேற்கத்திய நாடுகளில் 1/0, 2/0 என அடையாளமிடப்படுகிறது. டாக்டர். ஹானிமன் அவர்கள் 0/1, 0/2 எனக் குறிப்பிட்டுள்ளார். இதை எல்.எம்./1, எல்.எம்./2, எல்.எம்./3, என்று குறிப்பிட்டுச் செயல்படுத்தினார்.
நூற்றுப்படிமுறை வீரியம் - புதிய எல்.எம். வீரியம் ஓர் ஒப்பீடு
நூற்றுப்படிமுறை வீரியம்
1. சரியாகத் தேர்வு செய்யப்பட்ட மருந்தை எந்த வீரியத்தில் கொடுப்பது என்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன.
2. ஒருமுறை மருந்தைத் தேர்வு செய்து கொடுத்துவிட்டு அடுத்த வேளை மருந்தைக் கொடுப்பதற்கு நீண்ட கால இடைவெளி காத்திருக்க வேண்டும்.
2. மருந்து கொடுக்கப்படும் போது நாட்பட்ட நோயில் நலமீட்பு ஏற்படுவதற்கு 40, 50, 60 அல்லது 100 நாட்கள் டாக்டர். கெண்ட் போன்றவர்களுக்குக் கூட 2 - முதல் 5 - ஆண்டுகள் கால அளவு நீண்டதாக இருந்துள்ளது.
4. துயரருக்கு மருந்து வழங்கப்படும் போது துயர் மிகுதல் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது. மருந்து உட்கொள்ளத் தொடங்கும்போதே துயர்மிகுதல் ஏற்படுவதும் உண்டு. இவ் வாறான துயர்மிகுதல் ஏற்கனவே நோயின் காரணத்தால் இன்னலுற்றுக் கிடந்த நோயர் மேலும் தாங்க முடியா துயர் வலிகளை எதிர்கொண்டு அவதிப்பட வேண்டிய நிலையுள்ளது.
5. துயரருக்கு மருந்தை கொடுக்கும்போது மனம், உடல் என்று இரு வகைகளில் வினை புரிவதில்லை. உயர்ந்த வீரியம் மனநிலைகளிலும் குறைந்த வீரியம் உடற்கூறுகளிலும் வினை புரிகின்றன
6. நோயருக்கு மருந்தை கொடுத்துவிட்டு மருத்துவரும் நோயாளியும் மன உளைச்ச லோடு மருந்தின் செயல்பாடுகளுக்காக உரிய காலம் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
7. உயர்ந்த வீரியங்களில் மருந்து கொடுக்கப்படும்போது மிகச்சரியாக தேர்வு செய்யப்பட்ட மருந்தாக இருப்பினும் அதே மருந்தை மீண்டும் மீண்டும் கொடுக்க இயலாத நிலை யிருந்தது. ஆழ்ந்து வினைபுரியும் லாக்கசீஸ், லைக்கோபோடியம், செபியா, சிலிகா, நோய்க்கழிவு (நோசோடு) மருந்துகள் போன்றவற்றை அடுத்தடுத்து கொடுக்கவே முடியாது.
புதிய எல்.எம். வீரியம்
1. சரியாகத் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட மருந்தை வழங்குவதால் சிக்கலேதும் இல்லை. மருந்தை மிகக் குறைந்த வீரியத்திலிருந் வழங்கவேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
2. மருந்தை நாள்தோறும் மாதக்கணக்கிலும் தொடர்ந்து வழங்கலாம். ஒரே வீரிய மருந்தை குலுக்கிக்கொடுப்பதன் மூலம் எந்த தீய விளைவும் இன்றி விரைவான நோய் நீக்கம் கிடைக்கின்றது. (ஆர்கனான் 246)
3. புதிய முறை மருத்துவத்தில் நோய்த் தீர்வுக் கான காலம் பாதியாகவும், கால் பகுதியாகவும் குறைக்கப்பட்டு விரைவான நோய் நீக்கத்திற்கு வழியேற்பட்டுள்ளது. (ஆர்கனான் 246)
4. எல்.எம். வீரியத்தில் மருந்தை கொடுக்கும் போதே நோயர் நோயிலிருந்து விடுபட்ட நிலைக்கு வந்து விடுகின்றனர். ஆற்றலோடும் உயிர்த்துடிப் போடும் இருந்து கொண்டிருப்பார். நோய் முடிவுக்கு வரும் தருவாயில் தோன்றக் கூடிய துயர் மிகுதலை எளிதாகத் தாங்கிக்கொள்ள முடியும். (ஆர்கனான் அடிக்குறிப்பு 270)
5. எல்.எம். வீரிய மருந்து நோயாளியை இருவேறான வழிகளில் தாக்காமல் பாதிக்கப்பட்ட அனைத்து உடல் பகுதிகளிலும் (மனம், உடல்) ஒரே சீராகப் பணியாற்றி நோய் நீக்கத்தை ஏற்படுத்துகின்றது. (ஆர்கனான் 270)
6. மருந்தை கொடுக்கும்போது மருத்துவரும் நோயாளியும் எந்தவித மன உளைச்சல்களும் இன்றி அமைதியாக இருக்கலாம்.
7. புதிய வீரிய மருத்துவத்தின் படி இதே மருந்துகளைக் கூட தினமும், மாதக்கணக்கில் தொடர்ந்து கொடுத்து படிப்படியான வெற்றிகளைக் குவிக்க முடியும். (ஆர்கனான் 248)
எல்.எம். வீரியத்தில் மருந்து வழங்குமுன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் :
ஆர்கனான் 246-ல் டாக்டர் ஹானிமன் மருந்து கொடுக்கும் முன்னர் சில கட்டுப்பாடுகளைநினைவில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகின்றார்.
அவைகள் ...
1. தேர்வு செய்யப்பட்ட மருந்து மிகவும் கவனத்துடன் ஓமியோபதி மருத்துவ தத்துவங்களின் அடிப்படையில் மிகவும் சரியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2. ஆர்கனான் ஆறாவது பதிப்பில் கூறப்பட்டிருப்பதுபோல மருந்து புதிய முறைப்படி வீரியப் படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும்.
3. மருந்தை தண்ணீரில் கரைத்துக் கொடுக்கப்படவேண்டும்.
4. ஒவ்வொரு வேளை மருந்தையும் எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான அளவில் கொடுக்க வேண்டும்.
5. ஒவ்வொருமுறையும் கொடுக்கப்படும் மருந்து முன்பு கொடுக்கப்பட்டதை விட குலுக்கி உயர்ந்த வீரியமாக இருக்கவேண்டும்.
6. மருந்தை குறிப்பிட்ட கால அளவுப்படி கொடுக்கவேண்டும்.
ஏனிந்த கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் ?
1. ஓமியோபதி விதிமுறைப்படிச் சரியாகத் தேர்வுசெய்யப்படாத மருந்தை நோயாளிக்குக் கொடுத்தால் நோய் நீக்கம் செய்யவேண்டிய நோய்க்குறிகளுக்கு மாறாக தொடர்பற்ற புதிய இன்னல் தரக்கூடிய குறிகளைத் தோற்றுவித்து நோயாளியின் துயர்நிலை மிகுதியாகும். (ஆர்கனான் 249)
2. ஆர்கனான் ஆறாம் பதிப்பில் கூறப்பட்டுள்ளது போல் புதிய முறைப்படி வீரியப்படுத்தப்பட்ட மருந்து மிக உயர்ந்த ஆற்றலை வெளிப்படுத்தி மிகவும் மென்மையாக செயல்பட்டு நோயாளியின் துயரத்திற்கான அனைத்து உடற்பகுதிகளிலும் ஊடுருவி வினைபுரிந்து, விரைவான நோய் நீக்கத்தை ஏற்படுத்துகின்றது. எனவே புதிய முறைப்படி வீரியப் படுத்தப்பட்ட மருந்தைக் கொடுப்பதே சிறந்தது. (ஆர்கனான் 271-ன் அடிக்குறிப்பு)
3. மருந்தைத் தண்ணீரில் கலந்து கொடுக்காமல் உலர்ந்த உருண்டையாக நாவில் இட்டுச் சாப்பிடும் போது அது ஒரே ஒரு கசகசா விதை அளவில் (10 எண் அளவு) உள்ளதால் நாக்கின் சில நரம்பு மொட்டுகளின் மட்டுமே படுகிறது. அதேசமயம் பால் சர்க்கரைமாவுடன் நுணுக்கி தண்ணீரில் கரைத்து நன்கு கலக்கி மருந்தாகக் கொடுக்கும்போது நாக்கின் பெரும்பாலான நரம்பு மொட்டுக்களின் மீதுபட்டு நன்கு உடலுறுப்புகளில் செயல்படுகின்றது. (ஆர்கனான் 272)
4. ஒவ்வொரு வேளை மருந்தையும் மிகவும் குறைந்த அளவு கொடுக்கப்பட வேண்டிய அவசியத்தை டாக்டர். ஹானிமன் (ஆர்கனான் 253ன் அடிக்குறிப்பில்) மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட மருந்தை மிகக் குறைவான அளவில் கொடுக்கும்போது மட்டுமே மனதளவிலும் உடலளவிலும் மருந்தின் செயலையும் முன்னேற்றத்தையும் அடையாளமாகக் காணலாம். சரியாகத் தேர்வு செய்யப்பட்ட மருந்தானாலும் அளவில் மிகுதியாக கொடுக்கப்படும்போது அது மிகவும் தீமையான செயல் புரிந்து உடல் மனநிலைகளில் இடர் காணச்செய்யும். எனவே, மருந்தின் அளவு மிகக்குறைவானதாக கொடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமான விதிமுறை யாகும்.
5. ஒவ்வொரு வேளை மருந்தும் (குறிப்பிட்ட எண்ணிக்கை 10 - 12 முறை) குலுக்கி வழங்குவதன் மூலம் உயர்ந்த வீரியத்தில் இருக்கவேண்டும் என்பதும் மிக அவசியமாகும். வீரியம் மாற்றப் படாமல் கொடுக்கப்படும்போது உடலின் உயிராற்றல் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளாது. இது நலப்படுத்தப்பட வேண்டிய குறிகளை விட அந்த மருந்தின் குறிகளையே அதிகம் தோற்றுவிக்கும். ஏனெனில், ஏற்கனவே கொடுக்கப்பட்ட மருந்து உயிராற்றலின் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் போது மறுபடியும் அதே மருந்தை வீரியத்தை மாற்றாமல் கொடுக்கப்படும்போது அதுமாறுதலடையாத உயிராற்றலைக் காண்பதில்லை.
இவ்வாறு மாற்றபடாத வீரியத்தில் மருந்து கொடுக்கும்போது நலப்படுத்தப்பட வேண்டிய குறிகளுக்கும் மேல் மருந்தின் குறிகளை தோற்றுவிப்பதால் நோயாளி உண்மையிலேயே முன்பு இருந்ததை விட மேலும் நோயாளியாக்கப்படலாம்.
எனவே, நோய் நீக்கலை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்காதது மட்டுமின்றி நோயாளியின்நிலையில் துயர் மிகுதல் மட்டுமே தொடர்கிறது. ஆனால், ஒவ்வொரு வேளை மருந்தும் முன்பை விட கொஞ்சம் மாற்றத்துடன் குலுக்கி உயர்ந்த வீரியத்துடன் கொடுக்கப்படும்போது உயிராற்றல் மருந்தினால் எந்த இன்னலுமின்றி மாற்றப்படலாம். இயற்கையான நோயைப் பற்றிய உணர்வு குறைந்து நோய் நீக்கம் மிகவும் விரைவாக நெருங்கி வந்துவிடும்.
6. மருந்தை குறிப்பிட்ட கால இடைவெளி விட்டுக்கொடுக்கும்போது மட்டும் விரைவான நோய் நீக்கம் ஏற்படுகிறது.
நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் முறை
1. நோய்க்குறிகளுக்குச் சரியாகத் தேர்வு செய்யப்பட்ட மருந்தை 0/1 என்ற குறைந்த வீரியத்தில் உட்கொள்ள வழங்கப்படவேண்டும். எல்.எம்./1 (0/1) வீரிய 10-ம் எண் மருந்து உருண்டை (கசகசா விதை அளவுள்ளது) ஒன்றே ஒன்றை பால்சர்க்கரை மாவுடன் கலந்து ஒரு அவுன்ஸ் (6 டீஸ்பூன் நீரில் ஒரு டீஸ்பூன் ஆல்கஹால் கலந்துள்ள) கலவை நீரில் கலந்து 30 மி.லி. பாட்டிலில் சரியான மூடியிட்டு வழங்கப்படுதல் வேண்டும்.
2. மருந்துக் கரைசல் பாட்டிலை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளும் முன்பு 10 (அ) 12 முறை கையால் மேலும், கீழும் பலாமாகக் குலுக்கி ஒரு டீஸ்பூன் (5 மிலி) அல்லது அந்த பாட்டிலின் மூடியின் முக்கால் (தீ) அளவு மருந்தின் கலவையை அரை டம்ளர் நீரில் கலந்து ஒருவேளைக்கு உட்கொள்ளவேண்டும்.
3. அடுத்த நாளிலும் அதே பாட்டிலை 10, 12 முறை வலுவாகக்குலுக்கி இரண்டாம்நாள் மருந்தை 5 மிலி. உட்கொள்ளவேண்டும்.
4. ஒரு வீரிய 0/1 மருந்தை ஒரே வேளையாக உட்கொள்ளாமல் ஒருவாரம் (அ) 10 நாட்கள் என மருந்து உட்கொள்ளத்தக்கவாறு தினம் நன்கு குலுக்கி உட்கொள்வதன் மூலம் புதுப்புது உயர் வீரியங்களாக மாற்றி உட்கொள்கின்றோம்.
ஒரு வீரிய மருந்தை ஒரே வேளையாக கொடுக்காமல் மேற்கண்ட முறையில் பலவேளைகளாகப் பிரித்து ஒவ்வொரு நாள் மருந்தையும் குலுக்கல் முறையில் வீரியத்தை உயர்த்தி உட்கொள்ளவேண்டும். முதல் மருந்துக்கரைசல் தயாரித்து அதை 15 நாட்களுக்கு உட்கொள்ள கொடுக்கலாம். அதே மருந்து தேவைப்பட்டால் அடுத்த உயர்வீரியம் 0/2ல் மருந்து கரைசல் தயாரித்து மேற்கண்ட முறையில் உட்கொள்ளலாம்
கடுமையான சிறு நோய்களில் மருத்துவம்
கடுமையான பாதிப்புகளுடன் சிறு நோய்களில் இரண்டு மணி நேரத்திற்கொரு முறையாகவும் அவசர மருத்துவமாக ஒவ்வொரு மணிக்கும் ஒரு வேளையாகவும் அதற்கும் குறைவாக அடிக்கடியும் மருந்தை வழங்கலாம் என்று ஆர்கனான் 248 மூலம் டாக்டர். ஹானிமன் தெரிவித்துள்ளார்.
சிலசமயங்களில் மாரடைப்பு போன்ற மிகவும் அவசரமான சூழ்நிலையில் ஒவ்வொரு ½ அரை மணி நேரத்திற்கு ஒருமுறையாகவும் ஒவ்வொரு 5 - நிமிடத்திற்கு ஒருமுறையும் மருந்தை கொடுக்கவேண்டும். இதில் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டியது. ஒவ்வொரு முறையும் வீரியத்தை மாற்ற வேண்டியது மிகமிக அவசியமானதாகும்.
நாட்பட்ட நோய்களில் மருந்து
மிகவும் நாட்பட்ட நோய்களில் ஒருவேளைக் கான மருந்தை அளவில் ஒவ்வொரு ஸ்பூன்களாக கூட்டிக் கொடுக்கவேண்டும். தினமும் ஒருவேளையாகவோ ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்றோ வாரத்திற்கு இருமுறையாகவோ வாரத்திற்கொரு வேளையாகவோ மருந்தை
நோயின் தீவிரத்தன்மைக்கேற்றாற்போல வழங்க வேண்டும்.
முதல்வேளை மருந்து ஒரு ஸ்பூன் எனத் தொடங்கி அடுத்தடுத்த டோஸ் மருந்தை இரண்டு, மூன்று, நான்கு ஸ்பூன்கள் என்று ஒருவேளை மருந்தாக அளவு உயர்த்தி கொடுக்கவேண்டும்.
நோயாளிக்கு தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்த போதிலும் தினமும் மருந்தை மாதக் கணக்கிலும் கொடுத்து வரலாம்.
மருந்து குறைந்த கால அளவு வினை புரியக் கூடியது நீடித்த காலம் ஆழ்ந்து வேலை செய்யக்கூடியது என்று பாகுபடுத்திப் பார்க்க வேண்டிய தேவையில்லை.
எந்த வகையில் வேலை செய்யும் மருந்தாக இருந்தாலும் அதை தினந்தோறும் மாதக்கணக்கில் துயரர் நலமடைய நலமடைய தொடர்ந்து கொடுத்து வரலாம். மருந்தை இரவு உணவுக்குப் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கொடுக்கவேண்டும். மருந்து உட்கொண்ட பின் ஒரு மணி நேரம் உறங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று டாக்டர் ஹானிமன் ஆர்கனான் 248 மூலம் வழிகாட்டுகின்றார்.
மருந்து உட்கொண்டு வரும் நோயாளி எப்போது தம் வாழ்நாளில் தோன்றாத புதிய நோய்க்குறிகள் தோன்றுவதாக உணர்ந்து தெரிவிக்கின்றாறோ அப்போது அந்த புதிய நோய்க்குறிகளுக்கு ஒத்த மருந்தை தேர்வு செய்து முன்பு கொடுத்தது போலவே நன்கு வலிமையாக குலுக்கி வீரியத்தை மாற்றி தொடர்ந்து கொடுத்து வரவேண்டும்.
சரியாகத் தேர்வு செய்த மருந்தை தினமும் கொடுத்துவரும்போது நாட்பட்ட நோயின் சிகிச்சை நிறைவு பெறும் தருவாயில் பழைய நோய்க்குறிகள் மீண்டும் தோன்றும் போது நோயாளியின் துயர் மிகுதியாகும்.
இந்த நிலையில் மருந்தின் அளவை மேலும் குறைத்து கால இடைவெளியையும் நீண்ட இடைவெளிவிட்டு மருந்தை உட்கொள்ள கொடுக்கவேண்டும். நோய்க்குறிகள் மறைந்து வலுவிழந்துவிடும் நேரத்தில் மருந்து கொடுப்பதைப் பல நாட்களுக்கு நிறுத்திவிடலாம். அதிகமாக மருந்து கொடுத்த தால் தோன்றிய குறிகள் விரைவில் தொந்தரவு இன்றி உடல் நலத்தைப் பாதுகாப்பாக வைத்து விட்டு நோய்க்குறிகள் மறைந்துவிடும்.
உட்கொண்ட மருந்து செயல்பட்டு நலப்படுத்தப்பட வேண்டிய நோய்க்குறிகளுக்கு மாறாக தொடர்பற்ற புதிய இன்னல் தரக்கூடிய குறிகளை வெளிப்படுத்தினால் தேர்வு செய்து உட்கொள்ள கொடுத்த மருந்து தவறானது என்று முடிவு செய்து ஒரு முறிவு மருந்தைக் கொடுத்து இன்னல் குறிகள் மிகுதியாவதிலிருந்து சமன் செய்தபின்னர் குறிகளுக்கு ஒத்த சரியான வேறொரு மருந்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும் அல்லது இன்னல் தந்த குறிகள் கடுமையில்லாமலிருக்கும் பட்சத்தில் தவறாக தேர்வு செய்யப்பட்ட மருந்திற்குப் பதிலாகச் சரியான மருந்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும். (ஆர்கனான் 249)
No comments:
Post a Comment